‘இனியெல்லாம் இயற்கையே...’
- இது நாளைய உலகம் முழுவதுமே உச்சரிக்கப் போகும் ஒரு மந்திரச் சொல். அதற்கு ஓராயிரம் காரணங்கள் கண்முன்னே விரிந்து கிடக்கின்றன. பருவம் தப்பிய மழை... சுழற்றியடிக்கும் சுனாமி... வளைத்து விழுங்கும் வெள்ளம்... திடீர் தாக்குதல் நடத்தும் மர்ம நோய்கள்... என்று இந்தப் பூமிப் பந்திலிருக்கும் ஜீவராசிகள் ஒவ்வொன்றும் அனுபவிக்கும் இன்னல்களே இதற்கு சாட்சி.
‘மனித இனம், இயற்கையை விட்டு வெகுதூரம் விலகி வந்துவிட்டதன் விளைவுதான் இது’ என்று பலரும் எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அது அனைவரின் காதுகளிலும் ஏறிவிடுகிறதா...? ‘ஊருக்கு ஒண்ணு வந்தா... அது எனக்கும் வந்துட்டுப் போகட்டும்...’ என்ற அலட்சிய மனப்பான்மை கிட்டத்தட்ட அனைவரையுமே தொற்றிக் கொண்டுவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை.
இத்தகைய போக்குக்கு எதிராக, பலரும் வில்லெடுத்து போர் தொடுத்த வண்ணம் உள்ளனர். ‘இனி இயற்கைதான் இந்த பூமிக்கே சோறு போடும்... அதை நாம் மதிக்க வேண்டும்... வாழ்க்கையை அதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்...’ என்று முழங்கி வருகின்றனர்.
இயற்கைக்கு ஆதரவான வேலைகளை வேளாண்மையில் இருந்துதான் முதலில் தொடங்க வேண்டும். காரணம், இயற்கை, தன்னுடைய ஆக்ரோஷ முகத்தைக் காட்ட ஆரம்பித்தால், முதலில் பலியாவது வேளாண்மைதான். எனவேதான், ‘பசுமை விகடன்’ இதழ் சார்பில், ‘இனியெல்லாம் இயற்கையே!’ என்ற தலைப்பில் இயற்கை வேளாண்மை நேரடி களப்பயிற்சி தொடங்கப்பட்டது.
‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாரும் அவரின் அடியற்றி நடைபோடும் இளைஞர் பட்டாளத்தைச் சேர்ந்த தம்பிமார்களும் இம்முயற்சியில் கைகொடுக்க... மாவட்டந்தோறும் இந்தக் களப் பயிற்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது.
நிலத்தைப் பண்படுத்துவது, விதைப்பு, பராமரிப்பு, அறுவடை மற்றும் விற்பனை என்று இயற்கை வேளாண்மையில் ‘அ’ முதல் ‘ஃ’ வரை முழுமையாக விவசாயிகளுக்குக் கற்றுத் தரப்படுகிறது. ஏதாவது ஒரு இயற்கை வேளாண் பண்ணையில், சுமார் முப்பது விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட குருகுலவாசம் போல மூன்று நாட்களும் காலை முதல் நள்ளிரவு வரை இடைவிடாமல் பயிற்சி நடத்தப்படுகிறது. இயற்கை உரத் தயாரிப்பு, பூச்சி விரட்டிகள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள், தேனீ வளர்ப்பு, பூச்சி மேலாண்மை... என்று அனைத்துவித தொழில்நுட்பங்களும் பயிற்சிக்கு வரும் விவசாயிகளுக்கு அத்துப்படியாகின்றன. பயிற்சிக்குப் பிறகு, ஊர் திரும்பும் ஒவ்வொரு விவசாயியும் ஒரு வல்லுனராகவே வலம் வருவார்!
இந்த மூன்று நாள் பயிற்சிகள் அத்தனையும் நொடி பிறழாமல் ‘பசுமை விகடன்’ இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகையதொரு நேரடி அனுபவத்தைப் பதிவு செய்தவர், ‘பசுமை விகடன்’ உதவி ஆசிரியர் பொன்.செந்தில்குமார். இதைப் படித்த ஒவ்வொரு வாசகரும் தாமே பயிற்சியில் பங்கேற்ற அனுபவத்தைப் பெறும் அளவுக்கு இது அமைந்திருக்கிறது என்பதற்கு, வாசகர்களின் கடிதங்களே சான்று.
இந்தப் பயிற்சி அனுபவக் கட்டுரைகளை அப்படியே தொகுத்து புத்தகமாக வெளியிடுவதில் விகடன் பிரசுரம் பெருமை கொள்கிறது.
இது புத்தகமல்ல... களம் என்பதைப் படித்து முடித்ததும் நீங்களும் உணர்வீர்கள்...!
----
இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை - நம்மாழ்வார்
Author(s): நம்மாழ்வார்
Edition: First
Publisher: விகடன் பிரசுரம்
Year: 2008
Language: Tamil
Commentary: decrypted from 3FE3DB832C2A73052F3DDEE73E25FFF3 source file
Pages: 148
City: Chennai
Tags: தமிழ், Tamil, சுயமுன்னேற்றம், வேளாண்மை
இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை
இயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை
பதிப்பு
இயற்கையே இயங்குசக்தி
உள்ளே
வயல்வெளியே பல்கலைக்கழகம்!
நிலம் என்ன, நீள, அகலம் மட்டுமா?
நண்பர்களுக்குமா நஞ்சு?
இருமடிப் பாத்தி!
மண்புழுவா, கரையானா?
பயிரில் பூச்சி வந்தால்
மூன்று அமாவாசைகள்!
வறட்சியிலும் வரும்படி
முன்னோடிப் பண்ணை
எம்.பி.ஏ. படித்தும் விவசாயமா!
‘இயற்கை’ சான்றிதழ்!
தேனீ வளர்ப்பு - தித்திப்பு!
உலகம் இரு கரம் நீட்டி வரும்!
பாலையூர் அறுவடை