அந்தக் கட்டடத்தின் முன் கொஞ்சம் தயங்கி நின்றாள் சஸி. அது ஒரு ஆபீஸ் கட்டடமாகத் தெரியலை. கட்டடம் மட்டுமில்லை. தெரு கூட ஆபீஸ் இருக்கிற தெருவாக இல்லை. அந்த அமைதியும், நிசப்தமும், கூடாரமாக விரிந்த மர நிழல்களும், இலையிடுக்குகளின் வழியாகத் தரையில் இறைபடும் வெள்ளிக் காசுகளும், கீச்சிடும் அணில்களும், கரைகிற காகங்களும் வாசல் கூர்க்காவும், வெளி நாட்டுக் கார்களும்...
இல்லை... நிச்சயமாய் இது ஆபீஸ் இருக்கிற இடமில்லை. சஸி நிறைய ஆபீஸ்களைப் பார்த்திருக்கிறாள். வேலை தேடி ஒவ்வொரு இடமாக ஏறி இறங்கியிருக்கிறாள். ‘இப்போ வேலை எதுவும் காலி இல்லை. இப்படி நேராக வந்து நின்றால் எப்படி? வேகன்ஸி இருந்தால் அட்வர்டைஸ் பண்ணுவோம். அப்போது அப்ளிகேஷன் போடுங்க... போங்க...’ என்று சிடுசிடுத்த முகங்களையும், குரல்களையும் கேட்டிருக்கிறாள். சில இடங்களில் ஒரு வாரம், பத்து நாள் என்று தற்காலிக வேலையில் கூட இருந்திருக்கிறாள்.
ஒரு வாசனைத் தைலக் கம்பெனி, ஒரு மிட்டாய்க் கம்பெனி, ஒரு துணிக்கடை, ஒரே ஒரு ஆபீஸில் மட்டும் படித்த படிப்புக்கு ஏற்றதாய் ஒரு நாள் அக்கௌண்ட்ஸ் டிபார்ட்மெண்ட்டில் வேலை பார்த்திருக்கிறாள். அந்த ஒருநாள் சம்பளமாகப் பத்து ரூபாய் வாங்கியிருக்கிறாள். இப்படி மவுண்ட் ரோடு தம்பு செட்டித் தெரு பாரீஸ் கார்னரின் கோடி என்று நிறைய ஆபீஸ்களைப் பார்த்தாகி விட்டது.
அதெல்லாம் சாதாரண மனிதர்களால் சுலபமாக நெருங்க முடிந்த இடங்கள். பஸ்ஸில் ஏறி இறங்க முடிந்த இடங்கள். காரும் சைக்கிளும், ஸ்கூட்டரும், ஆட்டோவும், கால்நடையுமாக அமர்க்களப்படுகிற இடங்கள். எப்போதும் நடமாட்டமும், சந்தடியுமாக மனிதத் தலைகள், முகங்கள், உருவங்கள்... அங்கே, அவளுக்குத் தனி முகமில்லை; தனியான உருவமில்லை. கூட்டங்களில் யாருக்கும் தனியான உருவம் இருக்கவும் முடியாது...
ஆனால் இங்கே அப்படி இல்லை. இங்கு அவள் மட்டும் தனியாய், தனி முகமாய், தனியான உருவமாகத் தெரிந்தாள். இப்படி யாரும் இல்லாமல், எதிரில் வருபவர்கள் மீது இடிபடாமல் நடப்பதே ஒரு அனுபவமாக இருந்தது. காலை வீசிப் போட்டு, சந்தடி இல்லாமல், பிளாட்பாரக் கடைக்காரர்களின் கத்தல் இல்லாமல், எது எடுத்தாலும் ஒரு ரூபாய் கோஷம் கேட்காமல்... மெலிசான குரலில் பாட்டுப் பாடிக் கொண்டே கூடப் போகலாம். அவள் கள்ளக் குரலில் ராகம் இழுக்கிற மாதிரி ஒரு மலையாளப் பாடலின் முதல் இரண்டு அடிகளை முணுமுணுக்க ஆரம்பித்துச் சட்டென்று நிறுத்திக் கொண்டாள்.
--------------
மணல் வீடுகள் - இந்துமதி
Author(s): இந்துமதி
Edition: First
Publisher: CC
Year: 2020
Language: Tamil
Pages: 174
Tags: தமிழ், Tamil, நாவல், Novel, சிறுகதைகள்